திருநெல்வேலி
 
குற்றாலத்தில் சாரல் மழை பெய்துவருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆராவாரத்தோடு கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குதூகலத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. நேற்று முழுவதும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இடையிடையே இதமான வெயிலும் அடித்ததால் குளிரும், வெயிலும் கலந்த சூழலும், வேகமான காற்றும் அடித்தது.

பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆராவாரத்துடன் கொட்டுகிறது. இருந்தும் நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 

இந்த நிலையில் மதியம் 1.30 மணிக்கு ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை காவலாளர்கள் வெளியேறுமாறு கூறினர். அதன்பின்னர் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்தனர். 

ஆனால், மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோன்று, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 46 அடியும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடியும் உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்றும் இந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.

அதாவது, நேற்று முன்தினம் 50.70 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.15 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. 

இதுபோல் 65.29 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 26 அடி உயர்ந்து 91.53 அடியாக இருந்தது.  76 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 81.10 அடியாக உயர்ந்தது.