திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை வீசி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பெல்லாம் மீடியாக்களில் வானிலை ஆய்வு மையம் என்றாலே எத்தனை நாட்கள் மழை பெய்ய போகிறது என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது வெயிலின் அளவையும் வானிலை ஆய்வு மையம் தான் கணித்து சொல்லும் என்பதை மக்களுக்கு புரியவைத்திருக்கிறது இந்த கொளுத்தும் வெயில்.

செய்திகளை பார்த்தாலே 100, 110, 112 டிகிரி என வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது.

இதனால் மக்கள் வெளியே வருவதற்கே பயந்து போய் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

எப்போது மழை வரும் என்ற ஏக்கத்தில் காத்து கிடக்கின்றனர். கொளுத்தும் வெயிலால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்களெல்லாம் காய்ந்து போயின.

மேலும் பயிரிடமுடியாமல் விவசாயிகள் தங்கள் அன்றாட பிழைப்புக்கு மத்திய அரசையும், மாநில அரசையும் கெஞ்சி கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

குடிநீர் இல்லாமல் சென்னையில், பெண்கள் காலிகுடங்களுடன் சாலைகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு வாய்த்த அமைச்சர்களும் தர்மாக்கோல் திட்டம், ரப்பர் பந்து திட்டம் என எதை எதையோ சொல்கிறார்கள். ஆனால் எதுவும் பயன்பட்டதாக தெரியவில்லை.

இதனால் வானம் பார்த்த பூமி போல், வானம் பார்த்த மக்களாகவே தமிழகத்தில் வளம் வர தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.

இந்நிலையில், தமிழகத்தின் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மணி நேரமாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரத்தில், சுங்குவாசந்திரம், வாலாஜாபாத், சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், செவிலிமேடு, ஒரிக்கை உள்ளிட்ட இடங்களில்  பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சென்னையை சுற்றி அடிக்கும் மழையால் சென்னை கூழாக உள்ளது. இதனால் சென்னைக்கு எப்போது மழை என்று சென்னைவாழ் மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.