rain in chennai

சென்னையின் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்க்கும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கிராம புறங்களில் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்பத்தூர் - 7 செ.மீ ,சென்னை விமான நிலையம் , சிவகங்கை - 5செ.மீ, மகாபலிபுரம் - 4 செ.மீ, செம்பரம்பாக்கம், கும்பகோணம் - 3 செ.மீ, பொன்னேரி - 2 செ.மீ என மழையின் அளவு பதிவாகியுள்ளது.