Holiday declared for schools in tamil nadu
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்குவதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழையுடன் சூறாவளிக் காற்றும் பலமாக வீசிவருவதால் மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் சூறாவளி காற்று வீசத் தொடங்கியதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி நகர மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது.
நேற்று 'பிங்கர் போஸ்ட்' என்ற பகுதியில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் இமான் அகஸ்டீன் (18) என்பவர் மீது மரம் விழுந்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
