Rain and lightning struck the victim on the sidelines Sheep for the sacrifice
பழனி
பழனி அருகே மழையில் நனையாமல் இருக்க மரத்தின் அருகே ஒதுங்கியவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்த ஐந்து ஆடுகளும் மின்னலுக்கு பலியாயின.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் 13–வது வார்டு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சௌரியப்பன் (52). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர், பாலசமுத்திரம் அருகே உள்ள கொள்ளுகளம் என்னும் இடத்தில் தனக்குச் சொந்தமான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனையாமல் இருக்க, அருகே உள்ள ஒரு மரத்தின் அடிப்பகுதியில் சௌரியப்பன் ஒதுங்கி இருந்தார். ஆடுகளும் அவரது அருகே நின்றன.
திடீரென சௌரியப்பன் மற்றும் ஆடுகள் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சௌரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்த ஐந்து ஆடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சௌரியப்பனின் உடலை மீட்டு உடற் கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணைஸ்மேற்கொண்டுள்ளனர்.
சௌரியப்பனின் மனைவி லூர்துமேரி, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு வின்சென்ட் பவுல் (29) என்ற மகனும், ஜான்சி என்ற சின்னரசி (26) என்ற மகளும் உள்ளனர்.
மரத்தின் அருகே ஒதுங்கிய சௌரியப்பன் மற்றும் ஐந்து ஆடுகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
