தமிழகம்  மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல்அடுத்த 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
 
தமிழகம் முழுவதுமே இன்று பரவலாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. அதே வேளையில்  பெரும்பாலான இடங்களில் மழை மிதமானதாக இருந்தது. அதில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. தொடர் மழையால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை லேசான சாரால் மற்றும் சென்னை சுற்றுவட்டார  பகுதியில் மிதமான மழை இருந்தது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, மாதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மிதமான மழையும் பெய்தது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கனமழை பெய்து உள்ளது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.