திருவாரூர் 

திருவாரூரில் உள்ள கீழகூத்தங்குடி செல்லும் பாதையில் இரயில்வே கீழ்பாலம் அமைத்தால் தண்ணீரில் மூழ்கும் எனவே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கீழகூத்தங்குடி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். 

அந்த மனுவில், "திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையில் அகல இரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி கீழகூத்தங்குடி கிராமம் வழியாக அகல இரயில் பாதை செல்கிறது. 

இதில் கீழகூத்தங்குடி இரயில்வே கேட் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தற்போது இந்த இடத்தில் இரயில்வே கேட்டிற்கு பதிலாக கீழ்பாலம் அமைத்திட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரயில்வே கேட் பாதை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர். அதிலும், குறிப்பாக பள்ளி மாணவ - மாணவிகள் இந்த வழியாகதான் திருவாரூருக்கு செல்கின்றனர்.

மேலும், இந்தக் கிராமங்களில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்கள் வாகனங்களில் ஏற்றி இந்த இரயில்வே கேட் பாதை வழியாக திருவாரூர் நகருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் கீழ்பாலம் அருகில் காட்டாறு செல்கிறது. காட்டாறு பல்வேறு ஆறுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அப்போது கரையின் அருகில் உள்ள இரயில்வே கீழ்பாலம் மூழ்கும் அபாய நிலை ஏற்படும். 

எனவே, கீழகூத்தங்குடி செல்லும் பாதையில் இரயில்வே கீழ்பாலம் அமைப்பதைத் தடுப்பதுடன், பழைய நிலையில் இரயில்வே கேட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.  

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.