சொகுசு வசதிகளுடன், புழல் சிறையில் கைதிகள் இருக்கும் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தியும், கைதிகளுக்கான ஆடையை அணியாமல் சுற்றுலா செல்வதுபோல் நாகரிக உடைகளை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. 

இதனைத் தொடர்ந்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடத்திய சோதனையில் 18 டிவிக்கள், எப்.எம். ரேடியோக்கள் உள்ளிட்டவற்றை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர். சிறை துறை அதிகாரி ஒருவர், கஞ்சா போதை பொருள் எடுத்து சென்றது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  சிறை கைதியாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் மட்டுமே வெளியானது.

 

சொகுசு விடுதியில் இருப்பது போன்று பல்வேறு வசதிகள் புழல் சிறையில் செய்து கொடுக்கப்பட்டதற்கான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழக சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. புழல் சிறையில் சொகுசு வசதிகளுடன் கைதிகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், மற்றுமொரு சர்ச்சை புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளன.

 

சிறைக் கைதிகளே, பிரியாணி செய்து சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவில், புழல் சிறையின் ஒரு பகுதியில், கைதிகள் பிரியாணி சமைப்பதும், சிறையின் ஒரு பகுதியில் பிரியாணி செய்வதற்கான காய்கறிகள், சமையல் சாமான்கள் வைத்து கைதிகள் சமையல் வேலை செய்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.