பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் மீது பொய் வழக்கு போட்டு என்கவுன்டர் செய்ய நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல் குமார் திட்டமிட்டுள்ளதாக நாடார் அமைப்பினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.  

பசுபதி பாண்டியன் கொலையில் சந்தேகத்திற்கு உள்ளான நபர் ராக்கெட் ராஜா. இவர் இந்தக் கொலை வழக்கில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்றாலும் காவல்துறையின்  சந்தேக வலையத்திற்குள்தான் இருக்கின்றார்.

இவரின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. கராத்தே செல்வினை கொலை செய்த கட்டத்துரையை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு அந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.

வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கிய ராக்கெட் ராஜா அவரின் மறைவிற்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து இயங்கினார்.

மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர் மகளைக் காதலித்து மணம் முடித்து அங்கேயே செட்டில் பலநாட்களை கழித்து வந்தார். மேலும் அங்கு தாதாவாகவும் செயல்பட்டு வந்தார்.

ராக்கெட் ராஜா மீது இருந்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டநிலையில், நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல் குமார் தன்னை என்கவுன்டர் செய்ய உள்ளதாக ராக்கெட் ராஜா பரபரப்பு புகார் வீடியோ ஒன்றை பதிவு செய்து நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அதில், இது என்னுடைய கடைசி வாக்குமூலமாக கூட இருக்கலாம் எனவும்,  என்னை முறையாக கையாண்டால் நான் சரணடைகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராக்கெட் ராஜா மீது பொய் வழக்குகள் பதிவு செய்து என்கவுண்டர் செய்ய நெல்லை எஸ்பி திட்டமிட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் நாடார் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழக போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் இன்று மதியம் புகார் மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

நாடார் மக்கள் சக்தி தலைவர் ராக்கெட்ராஜா மீது நெல்லை மாவட்ட காவல் துறை எஸ்பி பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

அவரது தோட்டத்தில் வேலை செய்யும் முனுசாமி, மதன் இருவரையும் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி மற்றும் போலீசார் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இது மனித உரிமை மீறல் செயலாகும்.

ஆனைகுடி கிராமத்திற்குள் புகுந்து போலீசார் கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

போலீசார் நெல்லையில் ஜாதி கலவரத்தை தூண்டும்வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனை போலீஸ் டிஜிபி கண்டித்து நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.