காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் திருச்சி வந்தடைந்தன. இதனையடுத்து சிவசந்திரன் உடல்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, தீவிரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர். 

வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களின் உடல்களும் புட்காம் சிஆர்பிஎஃப் முகாமிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று மாலையே அனைத்து வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

டெல்லியில் இருந்து அனைத்து வீரர்களின் உடல்களும் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக வீரர்கள் சுப்ரமணியன், சிவசந்திரன் உடல்கள் தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் திருச்சி வந்தடைந்தது. தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.