Public protest against the math teacher action School locked

கரூர்

கணித ஆசிரியையை நடவடிக்கைகளை கண்டித்து முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி மாணவ - மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்தப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியையின் நடவடிக்கைகளை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை காவல் ஆய்வாளர் பாஸ்கரன், முதலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வரதராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளிக்கு போடப்பட்டிருந்த பூட்டை திறந்துவிட்டனர்.

பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், "கணித ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்" என்றனர். 

இதனையடுத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கபீர் மற்றும் தோகைமலை வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் மீனாவிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று, "விசாரணை நடத்தி கணித ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினர். 

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.