செம்பட்டி,

செம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ளது எஸ்.பாறைப்பட்டி. இந்த பகுதி மக்களுக்கு இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

எனவே, அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும், ஒரு குடம் தண்ணீரை ரூ.5–க்கு விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர்.

எனினும், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக் கிழமை காலை காலிக்குடங்களுடன் செம்பட்டி – பழனி சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.