டிபிஐ வளாகத்தில் போராட்டத்துக்கு இனி அனுமதி கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
டிபிஐ வளாகத்தில் போராட்டங்களுக்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (பழைய டிபிஐ வளாகம்) பள்ளிக்கல்வி துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் மொத்தம் 4 ஆசிரியர் சங்கங்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டன. ‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு!
ஆசிரியர் சங்கங்களின் இந்த போராட்டம் ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்றது. சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் இனி அனுமதி வழங்கப்பட மாட்டது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.