நான்காவது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் டேங்கர் லாரிகளும் ஓடாது என அறிவித்துள்ளதால் இனி கியாஸ் சிலிண்டர்களுகும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

“பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வைத் திரும்ப பெற வேண்டும்

15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடந்த மாதம் 30–ஆம் தேதி தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட ஆறு மாநிலங்களில் லாரிகள் இயக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்டத்திலும் நான்காவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நீடிக்கிறது.

ஈரோடு அருகே நரிப்பள்ளம் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஓட்டுநர்களும், கிளீனர்களும் லாரிகளிலேயே சமையல் செய்து சாப்பிட்டும், தூங்கியும் வருகிறார்கள்.

நான்கு நாள்களாகியும் போராட்டம் திரும்பப் பெறப்படாததால் ஒரு சில ஓட்டுநர்கள் லாரிகளை நரிப்பள்ளத்திலேயே நிறுத்திவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர்.

லாரிகள் ஓடாததால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி ஜவுளி, மஞ்சள், இரும்பு வகைகள், மின்னணு பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களின் சரக்கு போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து மஞ்சள், ஜவுளி, எண்ணெய் வகைகள் அதிகமாக வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலமாகதான் அனுப்பப்படுகிறது. இதனால் இந்த பொருட்கள் முழுமையாக தேக்கமடைந்து கிடக்கிறது.

லாரி புக்கிங் அலுவலகங்களில் பண்டல் பண்டல்களாக பொருட்கள் தேங்கியுள்ளது. அங்கு பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியது:

‘‘காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி, மஞ்சள் ஆகியன தேக்கம் அடைந்துள்ளன. மேலும், காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். எனவே, கியாஸ் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, லாரி உரிமையாளர்களுடன் அரசு அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.