protest with Black flag on January 1 against GST and online business ...

வேலூர்

ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து ஜனவரி 1-ஆம் தேதி வணிகர்கள் தங்கள் கடைகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம். தேவராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் கே.ஆனந்தன் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியது:

“ஜி.எஸ்.டி-க்கு எதிராகப் போராட்டத்தைத் தீவிரபடுத்த ஒவ்வொரு பகுதியில் இருந்து 100 வணிகர்களை போராளிகளாகத் தேர்வு செய்வது குறித்தும், சங்கத்திற்கு பத்து வணிகர்களை சிறைச் செல்லும் அணியில் சேர்ப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி-க்கு எதிராகவும், ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்தும் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி வணிகர்களின் கடைகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தப்படும்.

ஆன்லைன் வணிகம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானவை. ஜனவரி 30-ஆம் தேதி காந்தியின் 70-வது ஆண்டு நினைவு நாள் ஆகும். அன்று "காந்தி 70' என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தெய்வசிகாமணி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சேகர், தருமபுரி மாவட்டத் தலைவர் பிரபாகரன், மாவட்டச் செயலாளர்கள் வேல்அரசன், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.