கோவையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்… சாலை மறியலில் உட்கார்ந்த போராட்டக்காரர்கள்…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்..
ஆனால் அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்றும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு போராட்டக்காரர்களை நோக்கி முன்னேறிச் சென்ற போலீசார், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இளைஞர்களை ஆண் காவலர்களும், பெண்களை மகளிர் காவலர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனையடுத்து போராட்டக்கார்கள் அனைவரும் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்த் தவிக்கிறது.
போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதால் வ.உ.சி. மைதானம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.மீண்டும் அந்த இடத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துவிடாதபடி பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டக்கார்கள் தொடர்ந்து வ.உ.சி. மைதானம் மைதானத்தை முற்றுகையிட்டபடி உள்ளனர்.
இதேபோல், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகை, சீர்காழியில் போராடியவர்களையும் போலீசார் வெளியேற்றினர்
காஞ்சி நகரில் வணிகர் வீதி பகுதியில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றம் அருகே நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கும்பகோணத்தில் நடைபெற்று வந்த போராட்டமும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா - தமிழ்நாடு எல்லைப்பகுதியான திருத்தணியில் போலீசாரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
