திருப்பூர்

காஷ்மீரில் 8-வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துல் உலமா சபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷத்தில் மௌனம் காத்துவரும் மத்திய அரசு பதவி விலக வலியுறுத்தப்பட்டது.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டாள். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பினரும், பல்வேறு கட்சிகள், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் திருப்பூர் சி.டி.சி. அரசு பணிமனை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்டத் தலைவர் அப்துல்ரஹீம் ஹஜ்ரத் தலைமை வகித்தார். திருப்பூர் வட்டார செயலாளர் ரியாஜ்தீன் இம்தாதி வரவேற்றுப் பேசினார். பொருளாளர் அபுல்கலாம் ஆஜாத் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிறுமி என்றும் பாராமல் அவளை கற்பழித்து கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

அவர்களுக்கு துணை நிற்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதுடன், நிவாரணமும் வழங்க வேண்டும்.

இதில் மௌனம் காத்து வரும் மத்திய அரசு பதவி விலக வேண்டும். 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான உலமாக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது கலந்தர் உள்பட பலர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.