சிவகங்கை

விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட  பல்வேறு கட்சியினர் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதனைக் கண்டித்தும், ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மு.க,ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் சிவகங்கை  அரண்மனை வாசல் முன்பு திமுக மாவட்ட துணைச் செயலர் மணிமுத்து தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 15-க்கும் மேற்பட்ட திமுகவினரை, சிவகங்கை நகர காவலாளர்கள் கைது செய்தனர்.

இதேபோன்று, திருப்பத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, வடக்கு ஒன்றியச் செயலர் விராமதி மாணிக்கம் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுவட்டனர். 

இதில், நகரச் செயலர் கார்த்திகேயன், மாணவரணி ராஜ்குமார், நகர இளைஞரணி காளிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்நம்பி, பூக்கடை பாண்டி, மனோகரன், புதுப்பட்டி நேரு உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
அதேபோன்று, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, மானாமதுரை,திருப்பத்தூர், திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட பத்து இடங்களில் திமுக, திக, விசிக மற்றும்  முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.