promotion for tirupur adsp

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை போராட்டத்தின் போது பெண்ணை தாக்கி, உயர்நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளான திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் நான்குசாலை கடந்த ஏப்ரல் மாதம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்குதல் நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் மீது பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமனற்த்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தடியடி குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே அண்மையில் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக பதவி உயர்வி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுடிருந்தது.

இந்நிலையில் பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பொது நல வழக்கில், பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு பதவி உயர்வு கொடுத்துள்ளது.

இது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் உடனடியாக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.