வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்று குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவோடு சேர்ந்து கொரோனாவின் திரிபான ஒமிக்ரானும் பரவி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டால் தடுப்பூசி செலுத்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.