மறுகூட்டலில் மார்க் போடுவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மார்க் போட்டதாக வெளியான செய்தியால், தானும், தனது குடும்பமும் மன உளைச்சல் அடைந்துள்ளதாக பேராசிரியை உமா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மற்றும் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மறுகூட்டலில் தோ்ச்சி பெற வைத்ததாகவும், மதிப்பெண்கள் அதிகம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதற்காக தாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகள் எழுந்தது. 

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டதில்,  சாட்டப்பட்டுள்ள முன்னாள் தோ்வுத்துறை அதிகாரியும், பல்கலைக்கழக பேராசிரியையுமான உமாவை சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழகம் அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியை உமா. அதில், குறிப்பிட்ட காலத்தில் மறுமதிப்பீடு நடவடிக்கையில் முறைகேடு செய்த பணியாளர்கள் மீது மாநில அளவில் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்போது, தான் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலராக இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தத் தகவல்கள் எதையும் குறிப்பிடாமல், பணத்தின் பெயரால் எனது பெயர் மற்றும் சக பணியாளர்களின் பெயர்கள் ஊடகங்களில் குறிப்பிடப்படுவது நியாயமில்லை. குற்றம்சாட்டப்படும் விதமாக, என் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனது நியமனம் மற்றும் தேர்வு முடிவு புள்ளிவிவரங்களின் நகல்கள் மட்டுமே, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வெளியிடப்படுகின்றன.

தற்போது நடந்த 12 மணி நேரச் சோதனையிலும், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊடகங்களில் 16 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. கிரேடு மாற்றம் செய்ய விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் 10,000 ரூபாய் கொடுத்ததாகக் கணக்கிடப்பட்டு, இந்தப் புள்ளிவிவரம் வெளியானது தர்க்கபூர்வமாகப் பொருத்தமானதல்ல. 16 கோடி ரூபாய் எதுவும் சட்டபூர்வமாகத் தணிக்கை செய்யப்படவில்லை.

திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த அவதூறுகளால், நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதோடு, எங்களது சொத்துகளும் பாதிப்படைந்துள்ளன”  என இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.