Producer Council against Vishal

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால், தன்னுடைய தங்கையின் திருமணத்துக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனை நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தார். திருமணத்துக்கு சென்ற தினகரனும், தம்பதிகளை வாழ்த்தினார்.

இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தம்பி விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

வாக்குகளைச் சிதற வைக்கவே, விஷால் வேட்பாளராக களமிறங்கி உள்ளதாகவும், இதற்கு பின்னணியாக தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவருக்கு எதிராகவும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களிடம் இருந்தே எதிர் கருத்துக்கள் எழுந்து வருவதாக தெரிகிறது. நடிகர் விஷால் ஏற்கனவே, நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஷால், அரசியல் பிரவேசம் செய்துள்ளது, தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சார்பற்று செயல்பட்டு வருவது தயாரிப்பாளர் சங்கம் என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் ரகசியமாக விவாதித்து வருவதாக தெரிகிறது.

வேண்டுமென்றால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் ராஜினாமா செய்து விட்டு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடட்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் கூறுவதாக தெரிகிறது. இந்த விவகாரம் விரைவில் பூதகரமாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.