ஈரோடு

தனியார் சிலர் நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக கூறி கோபி தாசில்தார் அலுவலகத்தை மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தொட்டிபாளையம், பா.வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, புதுக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் 200 பேர் நேற்று ஒன்று திரண்டுவந்து மாட்டு வண்டிகளுடன் கோபி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிறகு, தாசில்தார் குமரேசன் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அவரிடம் விவசாயிகள் கூறியது: “கோபி அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சி பகுதியில் தனியார் சிலர் நிலத்தடி நீரை அனுமதியின்றி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஏற்கனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்று கூறினர்.

பின்னர் தாசில்தாரிடம் விவசாயிகள் புகார் மனுவை அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட தாசில்தார், கோபி வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சுமதி, அக்தர்பேகம் ஆகியோரை நேரடியாக வரவழைத்துப் பேசினார்.

இதனையடுத்து அனுமதி இல்லாமல் இயக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடி சீல் வைக்க தாசில்தார் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் ஆறு ஆழ்துளை கிணறுகளுக்கு சூல் வைக்கப்பட்டது.

அதன்பிறகு முற்றுகையில் ஈடுபட்டவர்கள், தாசில்தாருக்கு நன்றித் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.