நெல்லையில் அறுவைச் சிகிச்சையின் போது ஆசிரியை வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெனிட்டா தேவ கிருபாவதி(45). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திடீர் ஏற்பட்ட உடல்நிலைக்குறைவு காரணமாக வண்ணார்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் உள்ள கேலக்ஸி தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பபையில் இருக்கும் கட்டி அகற்ற வேண்டும், ஆகையால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. சில தினங்கள் கழித்து வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து அதே மருத்துவமனைக்குச் சென்ற ஆசிரியையிடம் மருத்துவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். உடனே வேறு மருத்துவமனைக்குச் சென்ற ஆசிரியையை பரிசோதித்த மருத்துவர் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதைப் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. 

இதனையடுத்து கேலக்ஸி மருத்துவமனை மீது ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.