private bus fare increase in deepavali festival season passengers may give complaints to officials
பண்டிகைக் காலம் என்று வந்து விட்டால் போதும்... மக்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்கள் பலவற்றில் முதலிடம் பிடிப்பவர்கள் வழக்கம்போல்... நம் ஆம்னி பஸ் கும்பல்தான்! சாதாரண நாட்களில் கமிஷன்களுக்காக இருநூறுக்கும் ஐநூறுக்கும் கூவிக் கூவிக் கூப்பிடுபவர்கள், அதை ஆயிரமும் இரண்டாயிரமுமாக ‘பார்த்து’ விடுவதைப் பார்க்கிறோம்.
ஒவ்வொரு முறையும் தீபாவளி, பொங்கல் என்றால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் சென்னைவாசிகள், புகார்களை தெரிவித்துக் கொண்டேதான் உள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்களே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் யாருக்கும் தெரியவில்லை.
இதோ... வழக்கம்போல் தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கிடைத்த கேப்பில் லீவு போட்டுக் கொண்டு, நான்கு நாள் சந்தோஷத்தை அனுபவிக்க வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். இதுதான் சந்தர்ப்பம் என காத்திருந்த ஆம்னி பஸ்களும் தங்கள் நோக்கம் போல் கட்டணத்தை ஏகத்துக்கும் உயர்த்தி வசூலிக்கின்றன. முன்பு ரூ.700 கட்டணம் உள்ள ஊர்கள் என்றால், இந்த சீசனில் ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை என வசூல் ரெக்கை கட்டிப் பறக்கிறது.
சென்னையின் கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், பெங்களூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, குமுளி என பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 700 முதல் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூடுதலாக 500 முதல் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் எல்லாம், இப்போது 50 முதல் 60 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் புகார் கூறி வருகின்றனர். ஒவ்வொரு முறை புகார் தெரிவிக்கப்பட்டாலும், அரசு ஒரு தொலை பேசி நம்பரை கொடுத்துவிட்டு, அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக அதை ஆக்கிவிடும். பயணிகளும், ஒரு முறை ஏமாந்துவிட்டோம், நாம் ஏமாந்தது ஏமாந்ததுதான் என்ற போக்கில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் வழக்கம்போல் ஆம்னி பஸ்களில் கொட்டம் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
இந்நிலையில், இந்தப் புகார் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியபோது, கட்டணம் வசூலிப்பது குறித்து நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்னி பஸ்கள் மீதான் புகார்களை கவனத்தில் கொண்டே போதிய அளவு சிறப்புப் பேருந்துகளை அரசும் இயக்கி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 1800 4256151 எண்ணுக்கு ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கூறினர்.
எத்தனை பேர் இந்த எண்ணுக்கு புகார் கொடுப்பார்களோ... எத்தனை பேர் மீது நடவடிக்கை பாயுமோ? பார்க்கத்தானே போகிறோம்!

