Private bus collected for additional fees Passengers who argue with the conductor
திருப்பூர்
பழனியில் இருந்து காங்கேயம் வழியாக ஈரோடு சென்ற தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் காங்கேயம் பேருந்து நிலையத்தில் பேருந்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆதங்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து தாராபுரம், காங்கேயம் வழியாக ஈரோட்டுக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அடியார்கள் கூட்டம் கூட்டமாக அந்த பேருந்தில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த பயணிகள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் அந்த பேருந்தில் ஏறினர். உடனே அவர்களை அந்த பேருந்து நடத்துனர் தடுத்து நிறுத்தி, "காங்கேயம் செல்வதாக இருந்தால் பேருந்து புறப்பட்ட பின்னர் ஏறிக்கொள்ளுங்கள். இருக்கையில் உட்கார்ந்தால் ஈரோடு டிக்கெட்டுதான் கொடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
இதனால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வேறு வழியில்லாமல் காங்கேயம் செல்வதற்காக ஈரோடு செல்லும் டிக்கெட்டை கூடுதலாக ரூ.20 கொடுத்து வாங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த பேருந்து மாலை 6 மணியளவில் காங்கேயம் பேருந்து நிலையம் வந்தது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் பேருந்தை முற்றுகையிட்டு நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பயணிகள், "அரசு பேருந்து ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், அடியார்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டு தனியார் பேருந்துகள் இப்படி கூடுதல் கட்டணம் வசூலித்து எங்களை வாட்டி வதைக்கின்றனர்.
நாங்கள் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டு, உடல் வலியுடன் ஊருக்குத் திரும்புகிறோம். இந்த நிலையில் பேருந்தில் எங்களை நின்றுகொண்டே பயணிக்கச் சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று வருத்தம் தெரிவித்தனர்.
காங்கேயம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின்போது பிரச்சனையை விசாரிப்பதற்கு மோட்டார் வாகன ஆய்வாளரோ, காங்கேயம் தாசில்தாரோ யாரும் வராததால், சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பேருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து திங்கட்கிழமை (இன்று) நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போகிறோம் என்று அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
