சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை செங்குன்றம், அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். 31 வயதான இவரை, திருட்டு வழக்கு விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, போலீஸாரின் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து ராஜசேகர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொடுங்கையூர் காவல் நிலைய குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட ராஜசேகரை அவரது வீட்டில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார் யார் யார்? ராஜசேகரை பிடித்தவர்கள் யார்? இரவு காவலில் காவல் நிலையத்தில் வைத்திருந்தவர்கள் யார்? என பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் நடத்தினர்.

இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளது. ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.