வேலூர்

வேலூர் ஆண்கள் சிறையில் ஷூ லேஸ்களால் தயாரித்த கயிறால் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறைக் காவலரை டி.ஐ.ஜி பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா மேலநேச்சபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (44). இவர், 1996-ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனையும் பெற்றார். 

அதன்படி, 1998-ஆம் ஆண்டு கஜேந்திரன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2004-ஆம் ஆண்டு பரோலில் சென்ற அவர் அதன்பின்பு தலைமறைவாகிவிட்டார். 

பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கஜேந்திரன் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கஜேந்திரன் கடந்த 24-ஆம் தேதி அதிகாலையில் இரண்டாவது பிளாக்கில் கைதிகள் அறையில் உள்ள கழிவறை ஜன்னலில் ஷூ லேஸ்களால் தயாரித்த கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து பாகாயம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காட்பாடி மாஜிஸ்திரேட்டு ஜெயகாந்தன் சிறையில் சுமார் 1½ மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட அறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிரகாஷை, "பணியில் கவனக்குறைவாக இருந்தார்" என்று கூறி ஜெயில் டி.ஐ.ஜி. ஜெயப்பாரதி நேற்று பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.