Asianet News TamilAsianet News Tamil

கைதியிடம் லஞ்சம் வாங்கிய சிறைக் காவலர் கைது; முக்கிய குற்றவாளியான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சம்பந்தி தலைமறைவு...

Prison police arrested for bribe from prisoner The main accuse jailor escape
Prison police arrested for bribe from prisoner The main accuse jailor escape
Author
First Published Mar 8, 2018, 8:41 AM IST


திரூவள்ளூர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதியை, ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய புழல் சிறைக்காவலர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சம்பந்தியும், ஜெயிலருமான ஜெயராமன் தலைமறைவாகிவிட்டார்.

சென்னையை அடுத்த புழலில் உள்ள சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 1500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 160-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். 

இங்குள்ள கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம். கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் சர்வ சாதாரணமாக அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. 

இங்குள்ள கைதிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. இங்கு வேலை செய்யும் காவலர்களே அவற்றை கைதிகளுக்கு விநியோகிப்பது தான் இங்குள்ள நொந்துகொள்ள வேண்டிய ஒன்று. அவர்கள் சும்மா செய்யவில்லை. ஒவ்வொரு பொருளுக்கு ஒரு விலை உண்டு. 

சிறையில் இருக்கும் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ, அவர்களின் உறவினர்கள் சிறை அதிகாரிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இலஞ்சமாக பணம் மற்றும் விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் என வாங்கி தருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் மிகின்அபுபக்கர் (42). இவர், கடந்தாண்டு போதை பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த சில மாதங்களாக ஜெயிலர் ஜெயராமன், கைதி மிகின் அபுபக்கரை சந்தித்து புழல் ஜெயிலில் இருந்து உன்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

இதனைகேட்ட மிகின்அபுபக்கருக்கு அதிர்ச்சி. புழல் சிறையில் நான் யாரிடமும் எந்த தகராறும் செய்யாமல் ஒழுங்காகதானே இருக்கிறேன். எதற்காக என்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயிலர் ஜெயராமன், “எனக்கு ரூ.50 ஆயிரம் இலஞ்சமாக கொடுத்தால், உன்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற மாட்டேன். இதுபோல்தான் 50-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி உள்ளேன். நீயும், உன் குடும்பத்தாருடன் பேசி பணத்தை வாங்கிக்கொடு?” என்று கேட்டுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மிகின்அபுபக்கர், சரிவர சாப்பிடாமல் இருந்தார். இதனிடையே கடந்த வாரம் அவருடைய நெருங்கிய உறவினரான நெமிலிச்சேரியைச் சேர்ந்த லியோ என்பவர் புழல் சிறைக்கு வந்து மிகின்அபுபக்கரை பார்த்துள்ளார்.

அப்போது அவர், "எனக்கு ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுத்தால்தான் அவர் என்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்றமாட்டார்"என்று கூறி கதறி அழுதுள்ளார். அதற்கு லியோ, இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் அவர், இதுபற்றி சென்னையில் உள்ள இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சிறையில் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், இரசாயன பொடி தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லியோவிடம் கொடுத்து, அதை ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுக்கும்படி கூறினர். 

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட லியோ, நேற்றுமுன்தினம் இரவு ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுக்க புழல் சிறைக்கு சென்றார். இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களும் புழல் சிறைக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர்.

லியோ, இலஞ்ச பணத்தை கொடுக்க ஜெயிலர் ஜெயராமன் அறைக்கு சென்றார். ஆனால், அந்த பணத்தை வாங்க மறுத்த அவர், நான் அலுவல் வேலையாக இருக்கிறேன். எனக்கு நெருக்கமான சிறைக்காவலர் பிச்சையாவிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன்படி லியோ, புழல் சிறை அருகே உள்ள காவலர் குடியிருப்புக்கு அருகில் சிறைக்காவலர் பிச்சையாவிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், பிச்சையாவை கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர், அவரை புழல் சிறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், புழல் சிறையில் ஒரு மாதத்துக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை இலஞ்சம் புழங்கி வருவதாக அவர் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

விடிய, விடிய நடத்திய விசாரணைக்கு பிறகு பிச்சையாவை இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சிறைக்காவலர் பிச்சையா, இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் சிக்கிய தகவல் அறிந்ததும் ஜெயிலர் ஜெயராமன் தலைமறைவாகிவிட்டார். அவர் கிடைத்தால்தான் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

புழல் சிறையில் லஞ்சம் பெற்ற சிறைக்காவலர் கைதான சம்பவம், சிறை அதிகாரிகள், காவலாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாக உள்ள ஜெயிலர் ஜெயராமன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சம்பந்தி ஆவார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகனுக்குதான் ஜெயிலர் ஜெயராமன் தனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios