primary education officer Request to the teachers to get 100 percent result
புதுக்கோட்டை
வருகிற கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் பாடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா கேட்டு கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தது.
தற்போது அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இலுப்பூரை தலைமை இடமாக கொண்டு மூன்றாவது கல்வி மாவட்டமாக இலுப்பூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா," அரசு அறிவித்துள்ளபடி அறந்தாங்கி, திருவரங்குளம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய ஒன்றியங்கள் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கும்.
புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இயங்கும்.
அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஒன்றியங்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் இயங்கும்.
இந்த முறையில் மழலையர் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துவகை பள்ளிகளும் இனி ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும்.
இனி உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் என அழைக்கப்படுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பாடுபட வேண்டும்.
வருகிற கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.
