'சீனாவின் தங்கம், வெள்ளி உலோகங்கள் பூசப்பட்ட, பெட்பாயில் காலண்டர் வருகையால், தமிழகத்தில், கோடிக்கணக்கான ரூபாய்க்கான காலண்டர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சீனா காலண்டரை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்' என, பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு பிறப்பதற்கு, மூன்று மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் சேலம், மதுரை, கோவை, சென்னை, சிவகாசி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரின்டிங் பிரஸ்களில், 2017ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்புக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் தயார் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி உலோகங்கள் பூசப்பட்ட பெட்பாயில் தினசரி காலண்டர்கள், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காலண்டர்களில் அட்டைக்கு பதில், மெல்லிய தங்கம், வெள்ளி உலோகங்கள் பூசப்பட்ட அலாய்டில், சுவாமி படங்கள் உட்பட அனைத்து விதமான காலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
10-க்கு 16 என்ற அளவுள்ள காலண்டர் அலாய்டு பேப்பர் 65 ரூபாய், 12-க்கு 19, 75 ரூபாய், 14-க்கு 23, 100 ரூபாய், 20-க்கு 30, 125 ரூபாய், 27-க்கு 50, 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த அளவுகளை தாண்டி, மெகா சைஸ் காலண்டர்கள், 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காலண்டர்கள் பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், காலண்டர்களுக்கு ஆர்டர் குவிந்து வருகிறது.
இது தமிழக பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
