pregnant ladies should register their pregnancy

தமிழகத்தில் கருவுற்ற பெண்கள் தங்களின் கர்பத்தை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதாரத்துறையிடம் தெரியப்படுத்தி பதிவு செய்வது கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கருவுற்ற பெண்களும், தங்களின் கர்பத்தை சுகாதாரத்துறையிடம் பதிவு செய்வது ஜூலை மாதம் முதல் கட்டமாயக்கப்படுகிறது. இதன் மூலம், பிறக்கும் குழந்தையும், தாயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதேசமயம், ஜூலை மாதம் முதல் கர்பத்தை பதிவு செய்யாத பெண்கள், குழந்தை பெற்று எடுத்தால், அந்த குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ ஜூலை மாதம் முதல், தமிழகத்தில் கருவுற்ற பெண்கள் தங்களின் கர்பத்தை அரசு மருத்துவமனை, பொது சுகாதாரமையம் ஆகியவற்றில் பதிவுசெய்வது கட்டாயம். மேலும், கர்ப்பத்தை பதிவு செய்வதற்கென பிரத்யேக தொலைபேசி எண் 102 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த எண்ணில், எந்த கருவுற்ற பெண்ணும் தொடர்ந்து கொண்டு, தங்களின் கர்ப்பத்தை, எந்த தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்யலாம்.

மாநிலத்தில் உள்ள கருவுற்ற பெண்ணும் குழந்தையை பாதுகாப்பாக பெற்று எடுக்க வேண்டும். சிசு இறப்பையும், பிரசவநேரத்தில் தாய் இறப்பையும் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம், மாநிலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

பெண்கள் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்தபின், சுகாதாரத்துறையினர், அந்த குறிப்பிட்ட கருவுற்ற பெண்ணின் மருத்துவ அறிக்கை, அடுத்து மருத்துவரை எப்போது பரிசோதனைக்காக சந்திக்க வேண்டும், நோய் தொற்று குறித்து எச்சரித்தல், சர்க்கரை நோய் எச்சரிக்ைக, உயர்ரத்த அழுத்தம் ஆகியவை குறித்து அந்த பெண்ணுக்கு நினைவூட்டல் முடியும்.

இதேபோன்ற திட்டம், கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பார், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய பகுதிகளில் சோதனை முயறச்சியாக செயல்படுத்தி பார்க்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பி.ஐ.சி.எம்.இ. என்று பெயர்.அதாவது, “கருவுற்ற பெண்ணும், குழந்தையையும் ஒருங்கிணைந்து கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல்” என்று பெயராகும்.

இந்த சோதனைத் திட்டத்தின் கீழ் இந்த 3 மாவட்டங்களில் உள்ள நகரங்களைச் சேர்ந்த கருவுற்ற பெண்கள், தங்களின் கர்ப்பகாலத்தை எந்த அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையிலும் தெரிவிக்கலாம். அவர்கள் அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் அந்த பெண்ணை பதிவுசெய்துவிடுவார்கள். இதன் மூலம், அந்த பெண்ணும், குழந்தையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் 60 சதவீத குழந்தைபேறு அரசு மருத்துவமனையில்தான் நடக்கிறது. ஆனால், தனியார் மருத்துவமனை மற்றும் வீ்ட்டில் பிரசவம் ஏற்பட்டால், அது குறித்து அரசுக்கு முறையாக தகவல்கள் வருவதில்லை. கிராமப்புறங்களில் 2 குழந்தைக்கு அதிகமாக குழந்தைபெற்று எடுக்கும் பெண்கள், அரசுக்கு தெரிவிப்பதில்லை. ஏனென்றால், முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் 2 குழந்தைகளுக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும் என்பதால் அரசுக்கு சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

ஆனால், இந்த திட்டம் ஜூலை மாதம்முதல் நடைமுறைக்கு வந்துவிட்டால், கருவுற்ற எந்த பெண்ணும் அரசுக்கு தெரியப்படுத்தி பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதன் மூலம், அந்த பெண் குழந்தை பெற்று எடுக்கும் வரை அரசு மருத்துவமனையால் கண்காணிக்கப்படுவார். இதன் மூலம், நாட்டில் மகப்பேறு நேரத்தில் குழந்தையும், தாயும் இறப்பதை தடுக்க முடியும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.