Poverty Alleviation Plans to be implemented in all Panchayats - Innovative Project Staff
நாமக்கல்
அனைத்து ஊராட்சிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட ஊழியர்கள் கூட்டமைப்புச் சேர்ந்தவர்கள் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுவாழ்வுத் திட்ட மாவட்டத் தலைவர் பேபி பிரிஸ்கில்லா தலைமை வகித்தார்.
செயலாளர் கருணாகரன் இவர்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் முருகேசன், பொதுச் சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் குப்புசாமி ஆகியோரும் பேசினர்.
“அனைத்து ஊராட்சிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.
பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி மதிப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
11 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் புதுவாழ்வு திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றித் தெரிவித்தார்.
