மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட மனைவியை, தீக்குச்சி வீசி கொளுத்திக் கொன்ற கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள காழியப்பநல்லூரைச் சேர்ந்தவர் ப. சிவக்குமார் (41). இவருக்கும், இவரது மனைவி அமுதாவுக்குமிடையே கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, தீ வைத்துத் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறிவிட்டு அமுதா, தனது உடலில் மண்ணெணெய்யை ஊற்றிக் கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த சிவக்குமார், தீக்குச்சியைக் கொளுத்தி அமுதா மீது வீசியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அமுதா, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பொறையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த பின்னர், சிவகுமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.செல்வசுந்தரி தீர்ப்பு வழங்கினார்.