Porter at Tambaram railway station returns bag containing Rs 5 75 lakh
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.5.75 லட்சத்தை பத்திரமாக திரும்ப ஒப்படைத்தார் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர். அவரை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி நேற்று நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்குச் செல்லும் விரைவு ரயில் கடந்த 1ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்து நின்று புறப்பட்டது. அப்போது நடைமேடையில் எவரும் இல்லாத நிலையில், கேட்பாரற்று ஒரு பை கிடந்ததை அந்த வழியாக வந்த ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளி பொய்யாமொழி என்பவர் கண்டெடுத்தார். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.
இதை அடுத்து அவர் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (ஆர்பிஎஃப்) தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலை அடுத்து அங்கு வந்த ஆர்பிஎஃப் அதிகாரிகள், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலில் இருந்த பயணி யாரெனும் இதனைத் தவறவிட்டிருக்கலாம் எனக் கருதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதேநேரத்தில், அந்தப் பணத்தை தவறவிட்ட பயணி ஒருவர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்குள்ள ஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அப்போது அதிகாரிகள், அவருடைய பை தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதை அவரிடம் தெரிவித்தனர். பின்னர் அந்தப் பையை வரவழைத்து, அவர் தவறவிட்டரூ. 5 லட்சத்து 75 ஆயிரத்து 720 -ஐ பத்திரமாக ஒப்படைத்தனர்.
தனது பணம் கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அந்த பயணி, சுமை தூக்கும் தொழிலாளியான பொய்யாமொழிக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் அதை ஏற்க மறுத்த பொய்யாமொழி, இது தமது கடமை என அந்தப் பயணியிடம் கூறினார்.
இதனைக் கேட்டு அந்தப் பயணி கண்கலங்கினாராம்.
இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தார் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி. அவர் பொய்யாமொழி குறித்து அறிந்து, அவரை வரவழைத்துள்ளார். பொய்யாமொழியை நேரில் சந்தித்த நவீன் குலாதி, அவருடைய நேர்மையை வெகுவாகப் பாராட்டினார். மேலும் அவரது செயலுக்கு மதிப்பளிக்கும் விதமாக, அவருக்கு ரயில்பெட்டி மாதிரி ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.
