poor people escaped from gst due to amma unavagam

மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரியால் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக வியாபாரம் நடைபெறும் சாதாரண ஹோட்டல்களில் வரி விதிப்பு 2% லிருந்து, 12 % மும், ஏசி ஹோட்டல்களில் 8 சதவீதமாக இருந்த வரிவிதிப்பு 18 சதவீதமாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி முறைக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறுவர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என பலர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களின் மூன்று வேளை உணவும் உணவகங்களிலேயே சுற்றி வருகின்றது. இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி இவர்களை பெரிதும் பாதிக்கிறது.

ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஏழை மக்களை இந்த ஜிஎஸ்டியால் நெருங்க முடியவில்லை. இதற்கு காரணம் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா என்றே கூறலாம்.

ஒரு வேளை சோற்றிற்கு கூட வழியில்லாமல் பசியும் பட்டினியுமாய் தவித்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் மலிவு விலை உணவகமான அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மலிவு விலை உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள்,ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு தரப்பிலும் ஜிஎஸ்டியை குறை கூறி கொண்டு இருந்தாலும் ஏழை மக்கள் அதை நினைத்து கவலை படாமல் இருக்கும் வகையில் ஜெயலலிதா அன்றே யோசித்து இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இது ஏழை மக்களுக்கு ஜெயலலிதா அளித்து சென்ற வரம் என்றே அனைவரும் கூறி வருகின்றனர்.