சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பு – ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகையை பொதுமக்‍கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்து 693 சிறப்புப் பேருந்துகள் இயக்‍கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதன்படி, சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பிற ஊர்களுக்‍கு வழக்‍கமாக இயக்‍கப்படும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன், கூடுதலாக வரும் 11-ம் தேதி 794 சிறப்பு பேருந்துகளும், வரும் 12-ம் தேதி ஆயிரத்து 779 சிறப்பு பேந்துகளும், 13-ம் தேதி ஆயிரத்து 872 சிறப்பு பேருந்துகளும் என 3 நாட்களுக்‍கு மொத்தம் 11 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்‍கப்பட உள்ளன.

இந்நாட்களில் சென்னையில் போக்‍குவரத்து நெரிசலை தவிர்க்‍கும் பொருட்டும், பயணிகளின் எளிதான பயணத்திற்கு ஏதுவாகவும், பயணிகள் ஏறும் இடங்களும் மாற்றியமைக்‍கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை அண்ணாநகர் மேற்கு, அடையாறு காந்திநகர், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்‍கப்படவுள்ளன. இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்துவைத்து, முன்பதிவையும் தொடங்கி வைத்தார்.

நேற்று இரவு 9 மணிவரை சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக 84 ஆயிரத்து 203 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து 59 ஆயிரம் பேரும், பிற ஊர்களில் இருந்து 25 ஆயிரம் பேரும் பயணம் செய்ய உள்ளனர். இதனால் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் இன்றே நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.