திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பறை அடித்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள், அனைத்து இடங்களிலும் சமத்துவப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவர்களின் மங்கல இசையும், அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் இந்தச் சமத்துவப் பொங்கல் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரை கோவிந்தராஜன் தலைமையிலான கலைக் குழுவினர் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி அரங்கைத் தெறிக்க விட்டனர்.

துணை முதல்வர் மருத்துவர் வெற்றிவீரன், துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சுந்தர், மருத்துவ மாணவர்கள் பிரபு, நவீன், அற்புதா, செல்வராணி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதேபோன்று, மன்னார்குடி சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தாளாளர்கள் ஆர்.எஸ். செந்தில்குமார், சண்முகராஜன் தலைமை தாங்கினர்.  பள்ளி முதல்வர்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் “தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் இ.வி. பாண்டியனும், “தமிழர் திருநாள்” என்ற தலைப்பில் மாணவர் கவியரசனும் பேசினர். மாணவி கிருத்திகா பொங்கல் திருநாள் குறித்த கவிதை வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ஆசிரியை சுஜிதா, மாணவி உமாமகேஸ்வரி தொகுத்து வழங்கினர். மாணவிகள் அனுபிரியா வரவேற்றார். தஸ்லீமா நன்றி கூறினார்.