Asianet News TamilAsianet News Tamil

சிக்கலில் சிக்கும் பொங்கல்பரிசு தொகுப்பு.. திருப்பி அனுப்பப்பட்ட 100 டன் வெல்லம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

பொங்கல் பரிசுக்காக வாங்கப்பட்ட வெல்லம் சரியாக இல்லாததால் அவற்றை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Pongal gift issue
Author
Tamilnádu, First Published Jan 14, 2022, 6:54 PM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 4ஆம் தேதி பொங்கல்தொகுப்பு பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். 
இந்த பொங்கல் பரிசுதொகுப்பு 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசு துணி பையில்  வைத்து, முழுக் கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது.  அதன்படி பொங்கல் பரிசில் பச்சரிசி, வெல்லம்,முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் இடம்பெற்று இருந்தன. 

அதில் மக்களுக்கு வழங்கப்பட்ட வெல்லம் நன்றாக இல்லை என்று பல்வேறு இடங்களில் இருந்து புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பொது விநியோக துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களில், ஒருசில பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், எடைக் குறைவாக இருப்பதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது சுமார் 100 டன் அளவிற்கு வாங்கப்பட்ட  வெல்லம்  சரியாக இல்லாததால் அவை அனைத்தும் வாங்கிய இடத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவைமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் படி மிளகு உள்ளிட்ட சில பொருட்களும் திருப்பி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெல்லத்துடன் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டால் அவை 7 நாட்களுக்கு மேல் சரியாக இருக்காது என்று ஒரு சில அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி வழங்கப்படும் வெல்லம் உணவு கலப்படம் குற்றம் செய்பவர்களுக்கு சமம். ஆகவே இந்த நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios