Pongal festival to come closer Sugarcane is sold for Rs.350 More expensive a ...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பொங்கல் திருவிழாவையொட்டி சந்தைப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு கரும்புகள் ஒரு கட்டு ரூ.350–க்கு விற்கப்பட்டது. விளைச்சல் குறைவு என்பதால் இன்னும் விலை ஏறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14–ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மக்கள் வீடுகள் தோறும் பொங்கல், கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சூரியனுக்கு படைத்து வழிபடுவர்.
அதே நேரத்தில் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் பொங்கல்படியாக கரும்பு, வாழைத்தார் போன்றவற்றை கொடுப்பதும் வழக்கம்.
இந்த நிலையில் பொங்கல் திருவிழா நெருங்குவதால் மக்கள் தற்போதிருந்தே கரும்பு கட்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இதற்கு ஏற்ப தூத்துக்குடி சந்தைப் பகுதியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்கப்பட்டது.
"கரும்பு தேனி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்தாண்டு கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது" என்று கரும்பு வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
