பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பேருந்துகளில் இன்று முதல் ரிசர்வ் பண்ணலாம்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செல்வதற்கான முன்பதிவு சென்னையில் இன்று தொடங்குகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சென்னை மற்றும் மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு, வருகிற 11-ம் தேதிமுதல் 13-ம் தேதிவரை தினந்தோறும் இயக்கப்படும் 6 ஆயிரத்து 825 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 445 சிறப்புப் பேருந்துகள் என, இந்த 3 நாட்களிலும் மொத்தம் 11 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

இதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்ததும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வருகிற 11-ம் தேதி முதல் சென்னையில் இருந்து நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

இதற்கென கோயம்பேட்டில் 26 கவுன்டர்களும், தாம்பரம் MEFZ-ல் 2 கவுன்டர்களும், பூந்தமல்லியில் ஒரு கவுன்டரும் என மொத்தம் 29 சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.