political parties welcoming the court order to close all sand quarry within six months

ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை அடுத்த 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. இந்நிலையில் இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பாஜ.க.,வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாமக., சார்பில் அன்புமணி, விசிக.,வின் தொல். திருமாவளவன் உள்பட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், 6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதத்திற்குள் தமிழகத்தை பாலைவனமாக்கவும் மணல் கொள்ளையர்கள் தயங்கமாட்டார்கள். குவாரியை அரசு எடுத்து நடத்துகிறது என்ற பெயரில் மணல் கொளை நடந்தது. 

சிறு கனிம விதிமுறைகளை மீறிதான் தமிழகத்தில் மணல் அள்ளப்பட்டது. ஒரு மீட்டர் ஆழம் வரையே மணலை அள்ள வேண்டும் என்ற விதியை யாரும் பின்பற்றுவதில்லை. கொள்ளையடிக்கப்பட்ட மணல்கூட தமிழகத்துக்கு பயன்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்டன. 

2003ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரூ. 95 ஆயிரம் கோடிக்கு மணல் விற்பனை நடந்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. காவிரி நீர் கடைமடை வரை செல்லாததற்கு மணல் கொள்ளையே காரணம். மணல் குவாரியை மூடுவது குறித்த உத்தரவை தமிழக அரசு முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

இது போல், பாமக.,வின் அன்புமணி ராமதாஸ், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், மணல் குவாரிகளை உடனே மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அவர் இது குறித்துக் கூறுகையில், தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத் தக்கது. இந்தத் தீர்ப்பை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யக்கூடாது.

அதே நேரத்தில் மணல் குவாரிகளை மூட 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் அனைத்து ஆறுகளும் முற்றிலுமாக சுரண்டப்பட்டு விட்டன. மூன்று அடி ஆழத்திற்கு மட்டும்தான் மணல் அள்ள வேண்டும்; இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் கூட அவை எதையும் தமிழக அரசும், மணல் கொள்ளையர்களும் பின்பற்றுவதில்லை. தமிழகத்தின் பெரும்பாலான ஆற்றுப் படுகைகளில் 40 அடி முதல் 60 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பயணம் செய்ய சாலை அமைத்துத் தர மறுக்கும் ஆட்சியாளர்கள், மணல் கொள்ளைக்கு வசதியாக ஆறுகளின் குறுக்கே சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்படுவதால் பாசனக் கால்வாய்களை விட ஆறுகளின் மட்டம் குறைந்து விட்டது. இதனால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் கூட பாசனக் கால்வாய்களில் தண்ணீர் பாய்வதில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஆறு மாதத்திற்கு மணல் கொள்ளை அனுமதிக்கப்பட்டால் ஆற்று மணல் என்ற இயற்கை வளத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு கேடு செய்யப்பட்டுவிடும். எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. மணலை இறக்குமதி செய்வதால் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டு மணலுடன் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய தாவரங்களின் விதைகள் கலந்து வரக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, ஆற்று மணலை இறக்குமதி செய்யும் போது கடுமையான தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மணல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத் தக்கது. எம்.சாண்ட் மணலை அதிகளவில் கொண்டு வரும் நடவடிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற கிளைத் தீர்ப்பை அமல்படுத்தும் பணிகளில் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இன்னும் பலர் அரசியல் ரீதியாகவும் ஆறுகளைப் பாதுகாக்கும் சமூக உணர்விலும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், 6 மாத கால அவகாசமே அதிகம்தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.