If the girl had meaningful contact with the police armed police angry stabbed and killed his fellow guards. The incident caused a stir at the police precinct.
பெண் போலீசுடன் பழகியதால், ஆத்திரமடைந்த ஆயுதப்படை காவலர், சக காவலரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், எஸ்பி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, நில மோசடி பிரிவு, கைரேகை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
இங்கு ஆயுதப்படை காவலர்களாக திருநெல்வேலியை சேர்ந்த சந்திரன், கல்லணை, சந்தானக்குமார், சுந்தரபாண்டி மற்றும் பெண் காவலர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா உள்பட பலர் வேலை பார்க்கின்றனர். சென்னை ஆயுதப்படையில் காவலராக வேலை பார்ப்பவர் அமிர்தராஜ்.

மேற்கண்ட 6 பேரும், காவலர் பயிற்சி காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களாக உள்ளனார். இதில், சரண்யாவின் கணவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் வேலை செய்கிறார். இதனால் சரண்யா, தனது 2 வயது குழந்தையுடன், திருவள்ளூர் நேதாஜி தெருவில் உள்ள அவரது அக்கா தேவி வீட்டில் தங்கியுள்ளார்.
காவலர் பயிற்சி காலத்தில் இருந்தே கல்லணையும், அமிர்தராஜும் சரண்யாவுடன் நெருங்கியதால், அவர்கள் 2 பேரும் அடிக்கடி சரண்யாவின் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதில், அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அமிர்தராஜ், சரண்யா வீட்டுக்கு சென்றார். அதை அறிந்த கல்லணை, அமிர்தராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, அவரை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கல்லணை, தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து கொண்டு, சரண்யா வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு,ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் அமிர்தராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால், கல்லணையை குத்தினார்.
இதை பார்த்த்தும், உடனடியாக தடுக்க வந்த சுந்தரபாண்டியன் மீது, கத்திகுத்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார். பின்னர் அமிர்தராஜ், அங்கிருந்த காவலர் சந்திரன், சரண்யாவின் அக்கா தேவி, அவரது தாத்தா சுருளியப்பன் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.
தகவலறிந்து திருவள்ளூர் தாலுகா மற்றும் மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த காவலர் அமிர்தராஜை கைது செய்தனர். மாவட்ட தலை நகரில், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு, ஆயுதப்படை காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.
