சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குமணன்சாவடி முதல் கோயம்பேடு வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர், அபராதம் விதிக்க சாலையின் நடுவில் பாய்ந்து வாகனங்களை மடக்குகின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. காவல்துறையினரால், நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், வாகனப் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

இச்சாலையில், போக்குவரத்தை சீர் செய்யவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில், தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகனங்களை குறி வைத்து நடுச்சாலைக்கு வந்து மடக்குகின்றனர்.

அதேபோல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், வேன்களையும் நடுவில் புகுந்து மடக்கி நிறுத்துகின்றனர். பின்னர், அந்த வாகனங்களை ஓட்டுபவர்களின் தகுதிக்கேற்ப வழக்குப் பதிவதும், அபராதம் வசூலிப்பதும், இலஞ்ச வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

காவல்துறையினர், திடீரென சாலையின் நடுவில் புகுவதைப் பார்த்து மிரளும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர்.

இதனால், பின்னால் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.