தடையை மீறி போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமுக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை நேற்று மாலை முதல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

முன்று நபர்களுக்கு மேல் கூடினால் அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்நிலையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உழவர் சந்தை முன் கூடி போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

மாணவர்களின் போராட்ட அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தலைமை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதை அடுத்து காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தைல் கைது செய்யவும் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.