கடலூர்
கடலூரில் வரிசையில் நிற்காமல் வங்கியில் நுழைய முற்பட்ட போலீசை மறித்து, நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த போலீஸ்காரர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நேற்று பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சீருடையில் வந்த போலீஸ்காரர் ஒருவர், வரிசையில் நிற்காமல் பணம் எடுப்பதற்காக வங்கிக்குள் செல்ல முற்பட்டார்.
இதைப் பார்த்து கோவமடைந்த பொதுமக்கள், “நாங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறோம். நீங்கள் மட்டும் வரிசையில் நிற்காமல் எப்படி வங்கிக்குள் செல்லலாம்” என்று போலீஸ்காரரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் “நான் அப்படித்தான் போவேன், உங்களால் என்ன செய்ய முடியும்” என்று திமிராக பதிலளித்தார்.
இதனால், கோவமடைந்த பொதுமக்கள் அந்த போலீஸ்காரரை வங்கிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ்காரருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதை அறிந்து அங்கே பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் பொதுமக்களை சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் அமைதியாக நின்றனர்.
பின்னர் வங்கியில் பணம் எடுக்க வந்த போலீஸ்காரர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தால் வங்கி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
