police travelling to tada near andhra to catch karnan

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள கொல்கத்தா நீதிபதி கர்ணன் தடா அருகே இருப்பதாக தகவல் கிடைத்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசும், தமிழக போலீசும் ஆந்திர விரைகிறது.

நீதிபதிகள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தியது தொடர்பான வழக்கில் உச்சநிதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளான நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி மன நல பரிசோதனைக்கு மறுத்துவிட்டதோடு அதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில் நீதிபதிகர்ணன் கொல்கத்தாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். 

சென்னை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன், பின்னர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார்ர்.

இந்நிலையில் கர்ணனை கைது செய்ய 4 காவல்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் காவல் துறை ஆணையரை சந்தித்து கர்ணனை கைது செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து கொல்கத்தா போலீசுக்கு உதவியாக தமிழக போலீசை காவல் அணையர் அனுப்பி வைத்தார். ஆனால் கர்ணன், கோவில் வழிபாட்டிற்காக காளஹஸ்தி சென்றுள்ளதால் கொல்கத்தா மற்றும் தமிழக போலீசார் காளகஸ்தி சென்றனர்.

இந்நிலையில் அவரது கைபேசி எண் ஆந்திரா மாநிலம் தடா அருகே இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து கொல்கத்தா மற்றும் தமிழக போலீஸ் ஆந்திரா சென்றுள்ளனர். நீதிபதி கர்ணனின் கார் ஓட்டுனரையும் தேடிவருகின்றனர்.