police registered a case against actor santhanam on land issue
பிஜேபி.,ன்னா என்ன பெரிய ‘... ?’ எனக்கு ஸ்டாலினே தெரியும்டா! : சினிமா ஸ்டண்டைக் காட்டிய ‘காமெடி’ சந்தானம்!
காமெடி நடிகர் சந்தானம், சினிமாவில் சம்பாதிப்பதை ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட பலவற்றில் முதலீடு செய்துவருகிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸிலும் ஈடுபட்டு வரும் சந்தானம், இதற்காக சில பல பிரச்னைகளிலும் சிக்கியுள்ளார். ஆட்களை வைத்து மிரட்டிய புகார்களும் அவர் பேரில் உள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை நேற்று மாலை 5 மணி அளவில், நிலத்தகராறு தொடர்பாக, கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரையும், அவரது வக்கீல் ஆலோசகர் ஒருவரையும் தாக்கியுள்ளார் சந்தானம். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டடதில், சந்தானம் பேரில் புகார் பதிவாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(40). கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், கட்டடங்கள் கட்டி விற்பனை செய்து வருகிறார். சினிமா காமெடி நடிகர் சந்தானமும், சண்முகசுந்தரமும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன் சென்னை போரூரை அடுத்த கோவூர், மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கினர். அதில் வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்காக, ரூ. 3 கோடி, சண்முகசுந்தரத்திடம் கொடுத்துள்ளார் சந்தானம்.
இதனிடையே, அந்த இடத்துக்கு சிஎம்டிஏ அப்ரூவல் கிடைக்காமல் போனதால், வணிக வளாகம் கட்டப்படும் திட்டம் தள்ளிப்போயுள்ளது. எனவே, இருவரும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கூறிய சந்தானம், தான் கொடுத்த பணம் ரூ.3 கோடியை திருப்பித் தருமாறு சண்முக சுந்தரத்திடம் கேட்டுள்ளார். அதன்படி, ரூ. 2 கோடி அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் பாக்கி தொகையை அவரிடம் இருந்து பெற சந்தானம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சண்முக சுந்தரம் தமக்கு ஸ்ரீலங்கா, துபை ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதில் வரும் தொகையை வைத்து திருப்பிக் கொடுத்து விடுவதாக சந்தானத்திடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தானம் தனது சினிமா செல்வாக்கைச் சொல்லி, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சண்முக சுந்தரம், தனது நிறுவனங்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரிடம் தகவலைச் சொல்லியுள்ளார். அதற்கு அவர், குடும்பத்தினரைச் சொல்லி, இது போன்று மிரட்டல் வந்தால், போலீஸில் புகார் பதிவு செய்துவிடலாம் என்று ஆலோசனை கூறினாராம். இதனிடையே, சண்முக சுந்தரம் ரூ. 25 லட்சத்தை தயார் செய்து, சந்தானத்திடம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தாராம்.
இந்நிலையில், தனக்குக் கொடுக்க வேண்டிய மீதப் பணத்தை திருப்பிக் கேட்பதற்காக நடிகர் சந்தானமும், அவரது மேனேஜர் ரமேஷும், வளசரவாக்கம் சௌத்ரி நகரில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே சண்முகசுந்தரமும், வக்கீல் பிரேம்ஆனந்த்தும் இருந்துள்ளனர்.
அப்போது, நடிகர் சந்தானம் சண்முகசுந்தரத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சற்று நேரத்தில் ஆத்திரமடைந்த சந்தானம், சண்முக சுந்தரத்தை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் பிரேம் ஆனந்த், ஏன் அடிக்கிறீர்கள், பேசிக் கொண்டு தானே இருக்கிறோம் என்று கேட்டதற்கு, நீ யாருடா குறுக்க வர என்று கேட்டுள்ளார் சந்தானம்.
அதற்கு பிரேம், தான் பாஜக., பிரமுகர் என்று கூறியுள்ளார். அதற்கு சந்தானம், பிஜேபி.,ன்னா என்ன பெரிய ‘... ?’ எனக்கு ஸ்டாலினே தெரியும்டா என்று கூறி ஆத்திரமடைந்தவர், அவரது மேனேஜருடன் சேர்ந்து சண்முகசுந்தரத்தையும், பிரேம்ஆனந்தையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது, பிரேம் ஆனந்தின் மூக்குச் சில் உடைந்து, ரத்தம் வழிந்துள்ளது. பதிலுக்கு அவர்களும் தாக்க, அங்கே இருதரப்பும் அடிதடியில் இறங்கியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே, இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனிடையே மிக மோசமாகக் காயமடைந்த பிரேம்ஆனந்த், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவருக்கு இன்று சிறிய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதேபோல், சந்தானமும், அவரது மேனேஜர் ரமேஷும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நடிகர் சந்தானம் மீது வழக்கறிஞர் பிரேம் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதியும், சந்தானமும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
