விடுப்பு கொடுக்காததால், விரக்தியடைந்த போலீஸ்காரர், காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்றார். இச்சம்வம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). நாங்குநேரி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்கிறார். இவரது சகோதரி குழந்தைக்கு இன்று காது குத்தும் விழா நடக்கிறது. அந்த விழாவில் தாய் மாமன் சடங்கு செய்வதற்காக வெங்கடேஷை அழைத்துள்ளனர். இதையொட்டி வெங்கடேஷ்,, காது குத்து விழாவில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் 3 நாள் விடுப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில், நேற்று காலை  காவல் நிலையம் சென்ற அவர், அந்த கட்டிடத்தின் மாடிக்கு சென்று, அங்கு கிடந்த டியூப் லைட்களை உடைத்து உடலில் கிழித்து கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த சக போலீசார், வெங்கடேஷை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேஷை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரை போட்டோ எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் நாங்குநேரி கவால் நிலையத்துக்கு சென்றனர். உடனே  அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.