மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகள் மீது போலீசார் என்கவுண்டர் செய்து வருகின்றனர். 

அந்த வரிசையில் இன்று மதுரை சிக்கந்தர் சாவடியில் போலீசார் மேலும் ஒரு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சென்னை அயனாவரம் டிக்காஸ் சாலையை சேர்ந்த பிரபல ரவுடி கண்ணன் என்கிற மாயக்கண்ணன் (40). சொந்த ஊர் மதுரை  மாட்டுத்தாவணி. 

மாயக்கண்ணன் மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, சென்னை பட்டாபிராம், ஓட்டேரி, அயனாவரம் உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். 

மாயக்கண்ணன் மீது 6 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. 

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சகுனி கார்த்திக், மாயக்கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. 

சுதாரித்த மதுரை செல்லூர் போலீசார் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு ரவுடிகளும் கொல்லப்பட்டனர். 

இதையடுத்து அவர்கள் உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவுடிகளிடம் இருந்து துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.